இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு (TRCSL), அமைச்சரவையின் அங்கீகாரத்துடன், இலங்கையினுள் தேசிய வினைஞர் வானொலி அவசர தொடர்பாடல் வலையமைப்பை நிறுவுவதற்கு பிராந்திய மனிதாபிமான பாதுகாப்பு திட்டங்களுக்கான உதவித் திட்டம் (GGP) கீழ் ஜப்பான் அரசாங்கத்துடன் மானிய ஒப்பந்தம் ஒன்றிற்கு உடன்பட்டது.
இந்த மானிய ஒப்பந்தமானது 2026 மார்ச் மாதம் 24 ஆம் திகதி ஜப்பான் அரசாங்கத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கையின் ஜப்பான் தூதுவர் திரு.அகியோ இசோமாட்டா அவர்கள் மற்றும் இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் திரு.வருண ஸ்ரீ தனபால அவர்களினால் கைச்சாத்திடப்பட்டது. இக் கைச்சாத்திடும் நிகழ்வு கொழும்பில் அமைந்துள்ள ஜப்பான் தூதுவரக காரியாலத்தில் இரு நாட்டு உயர் அதிகாரிகளின் கலந்து கொள்ளலுடன் இடம்பெற்றது.
181,837 அமெரிக்க டொலர் (சுமார் 57 மில்லியன் ரூபா) பெறுமதியான இந்த மானியமானது தொலைத்தூர தொடர்பாடல்களுக்கு ஏற்ற உயர் அதிர்வெண் (HF) அடிப்படை நிலையம், மிக உயர் அதிர்வெண் அதி உயர் அதிர்வெண் பரிமாற்ற அடிப்படை நிலையங்கள் (VHF/UHF base station transceivers), களப் பயன்பாட்டிற்கான கையடக்க உபகரணங்கள் (hand-held radios for field deployment) மற்றும் அதற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் உட்பட தொழில்துறை மட்டத்தில் வினைஞர் வானொலி தொடர்பாடல் உபகரணங்களை கொள்முதல் செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இயற்கை அனர்த்த நிலைகளின் போது பாரம்பரிய வலையமைப்பு தொடர்புகள் துண்டிக்கப்பட இடமிருப்பதால், அவ்வாறான நிலைகளின் போது அவசர பதிலளிப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தக்கூடிய வலுவான மற்றும் சுயாதீன தொடர்பாடல் வலையமைப்பு ஒன்றினை நிறுவுவது இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
தேசிய அபிலாசைகளுக்கு அமைவாக, குறிப்பாக அவசர சேவைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் போது, வினைத்திறன் மற்றும் நம்பிக்கைமிக்க தொடர்பாடல் சேவையை மேம்படுத்தும் பொருட்டு, இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் அடிப்படை பொறுப்பிற்கு ஏற்ப இந்த முன்முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தேசிய அனர்த்த தயார்நிலை மற்றும் பதிலளித்தல் திறன்களை இன்னும் வலுப்படுத்தி, வினைஞர் வானொலி ஒன்றியம் மற்றும் உரிமம் பெற்ற செயற்பாட்டாளர்கடைய ஒத்துழைப்போடு இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் இந்த திட்டம் அமுல்படுத்தப்படும்.
இயற்கை அனர்த்த நிலைகளில் பதிலளித்தல் மற்றும் இலங்கை மக்களுடைய நலன்புரிக்காக பல்வேறுபட்ட நிகழ்ச்சித்திட்டங்களை செயற்படுத்தும் நோக்கில் இலங்கையின் நிர்வாக திறன்களை வலுப்படுத்துவதற்கு ஜப்பான் காட்டுகின்ற தொடர்ச்சியான அர்ப்பணிப்பை தூதுவர் இசோமாட்டா அவர்கள் இங்கு வலியுறுத்தினார்.
இலங்கையின் தொடர்பாடல் மீள்திறனை மேம்படுத்துவதற்கு பெற்றுத்தருகின்ற தொடர்ச்சியான ஒத்துழைப்பிற்காக இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவானது, ஜப்பான் அரசாங்கத்திற்கும் மற்றும் ஜப்பான் நாட்டு மக்களுக்கும் தனது இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கின்றது.
(புகைப்படம் : கொழும்பு ஜப்பான் தூதரக காரியாலயம்)