இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு (TRCSL), 2026 ஒக்டோபர் மாதம் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற “டிஜிட்டல் இணைப்பை மேம்படுத்துதல்: தெற்காசியாவில் பாதுகாப்பான மற்றும் மீள்திறன் கொண்ட கடலடி தொலைத்தொடர்புக் கேபிள் கட்டமைப்புகள்” (Promoting Digital Connectivity: Secure and Resilient Undersea Cables in South Asia) எனும் தொனிப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிராந்தியத் தொழில்நுட்பக் பயிற்சிப்பட்டறையில் தீவிரமாகப் பங்கேற்றது.
இந்தப் பிராந்தியத் தொழில்நுட்பக் பயிற்சிப்பட்டறையானது, இந்திய-பசிபிக் பிராந்தியம் முழுவதும் பாதுகாப்பான, தடைகளைத் தாங்கக்கூடிய மற்றும் நிலைபேறான கடலடி தொலைத்தொடர்புக் கேபிள் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் நோக்கில் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிகழ்ச்சித் திட்டமான Cable Connectivity and Resilience Centre (CCRC) இனால் பிராந்திய பயிற்சிப்பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டது. அவுஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளின் பங்கேற்புடன் நடைபெற்ற இப்பயிற்சிப்பட்டறைக்கு பங்களாதேஷ், மாலைதீவு, மொரீஷஸ், ஓமான், தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி, சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகள், தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் நிறுவனங்களின் பிரதிநிதிகள், கடல்சார் அதிகாரசபைகளின் அதிகாரிகள் மற்றும் கைத்தொழில் துறைப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
TRCSL சார்பில், அதன் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் திரு. பந்துல ஹேரத் அவர்கள், உரிம முகாமைத்துவப் பணிப்பாளர் பொறியியலாளர் திரு.புத்திக ஹேரத் அவர்கள் மற்றும் வலையமைப்புப் பணிப்பாளர் பொறியியலாளர் திரு.எஸ்.ஈ.வாகிஷ்ட ஆகியோர் இப்பயிற்சிப்பட்டறையில் பங்கேற்றனர்.
ஆரம்ப அமர்வில் முக்கிய உரையை நிகழ்த்திய இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் (TRCSL) பணிப்பாளர் நாயகம், டிஜிட்டல் உருமாற்றத்திற்கு வசதியளித்தல், பொருளாதார அபிவிருத்தியை ஊக்குவித்தல் மற்றும் சர்வதேச இணைப்புத் திறனை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் கடலடி தொலைத்தொடர்புக் கேபிள் உட்கட்டமைப்புகள் ஆற்றும் முக்கியமான பங்கை வலியுறுத்தினார். பொருளாதாரங்களும் மற்றும் சமூகங்களும் டிஜிட்டல் சேவைகளில் நாளுக்கு நாள் அதிகளவில் தங்கியிருக்கும் சூழலில், கடலடி தொலைத்தொடர்புக் கேபிள் வலையமைப்புகளின் பாதுகாப்பு, தடங்கல்களைத் தாங்கும் திறன் மற்றும் தொடர்ச்சியான செயற்பாட்டை உறுதிப்படுத்துவது மூலோபாய ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடலடி தொலைத்தொடர்புக் கேபிள் உட்கட்டமைப்புகளைப் பாதுகாப்பதற்கும் மற்றும் நம்பகமான சர்வதேச இணைப்புத் திறனை உறுதிப்படுத்துவதற்கும் அரசாங்கங்கள், ஒழுங்குமுறை நிறுவனங்கள், தொலைத்தொடர்பு சேவை செயற்படுத்துநர்கள், கேபிள் உரிமையாளர்கள், கடல்சார் அதிகாரிகள் மற்றும் ஏனைய தொடர்புடைய பங்குதாரர்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். உலகளாவிய ரீதியில் இடம்பெறும் சர்வதேச தரவுப் பரிமாற்றங்களில் பெரும்பாலானவை கடலடி தொலைத்தொடர்புக் கேபிள் கட்டமைப்புகள் ஊடாகவே நடைபெறுவதால், டிஜிட்டல் சேவைகளின் தொடர்ச்சியான செயல்பாட்டைப் பேணுவதற்கும் மற்றும் நிலைபேறான பொருளாதார அபிவிருத்திக்கு ஆதரவளிப்பதற்கும் அக்கேபிள் முறைமைகளின் தாங்கும் திறனை மேம்படுத்துவது அத்தியாவசியமானது எனவும் பணிப்பாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டார்.
TRCSL சார்பில் இடம்பெற்ற முக்கியமானதொரு விளக்கவுரையாக, உரிம முகாமைத்துவப் பணிப்பாளர் பொறியியலாளர் திரு.புத்திக ஹேரத் அவர்கள், “இந்தியப் பெருங்கடலின் கடலடி கேபிள் வலையமைப்பில் இலங்கையின் மூலோபாய அமைவிடம்: டிஜிட்டல் இணைப்பு, தாங்கும் திறன் மற்றும் பிராந்திய மையநிலையமொன்றை அபிவிருத்தி செய்வதற்கான வாய்ப்புகள்” எனும் தலைப்பில் விளக்கவுரையொன்றை நிகழ்த்தினார்.
இவ்விளக்கவுரையில், இந்தியப் பெருங்கடலில் இலங்கைக்குரிய தனித்துவமான புவியியல் அமைவிடம் குறித்தும், தெற்காசியா, மத்திய கிழக்கு, தென்கிழக்காசியா, கிழக்காசியா, ஐரோப்பா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய பிராந்தியங்களை ஒன்றோடொன்று இணைக்கும் பிரதான சர்வதேச கடல்சார் கப்பல் போக்குவரத்து வழித்தடங்கள் மற்றும் கடலடி தொலைத்தொடர்புக் கேபிள் வழித்தடங்களுக்கு இலங்கை அண்மையில் அமைந்துள்ளமை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. மேலும், சர்வதேச தொலைத்தொடர்பு உட்கட்டமைப்புகளின் தடைகளைத் தாங்கும் திறனையும் இணைப்புப் பல்வகைமையையும் வலுப்படுத்துவதுடன், இலங்கையைப் பிராந்திய டிஜிட்டல் இணைப்பு மையமாக மேலும் அபிவிருத்தி செய்வதற்கு இந்த மூலோபாய அமைவிடத்தின் ஊடாக உருவாகும் வாய்ப்புகளும் ஆராயப்பட்டன.
மேலும், பயனுள்ள கொள்கை மற்றும் ஒழுங்குமுறைச் சூழலைப் பேணுதல், தடைகளைத் தாங்கக்கூடிய உட்கட்டமைப்புகளை அபிவிருத்தி செய்தல், கேபிள் முறைமைக ளைப் பாதுகாத்தல் மற்றும் பராமரித்தலுக்கான வினைத்திறன்மிக்க நடைமுறைகளைப் பின்பற்றுதல், முறையான அனுமதி வழங்கும் செயன்முறைகளை நடைமுறைப்படுத்துதல், முதலீடுகளுக்கு வசதியளித்தல் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் ஆகிய விடயங்களும் இவ்விளக்கவுரையில் கலந்துரையாடப்பட்டன. எதிர்காலக் கடலடி தொலைத்தொடர்புக் கேபிள் முதலீடுகளுக்குத் தேவையான பின்னணியை உருவாக்குவதுடன், பாதுகாப்பான மற்றும் நம்பகமான பிராந்திய டிஜிட்டல் இணைப்பை உறுதிப்படுத்துவதற்கான இலங்கையினால் வழங்கக்கூடிய பங்களிப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இந்நடவடிக்கைகளின் முக்கியத்துவம் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
இப்பயிற்சிப்பட்டறை, கடலடி தொலைத்தொடர்புக் கேபிள்கள் தொடர்பான கொள்கைகள் மற்றும் ஒழுங்குமுறை நடைமுறைகள், உட்கட்டமைப்புப் பாதுகாப்பு, கடல்சார் பிரதேசம் தொடர்பான விடயங்கள், அனுமதி வழங்குதல் மற்றும் உரிமங்களை வழங்குவதற்கான கட்டமைப்புகள், கேபிள்களைப் பழுதுபார்த்தல் மற்றும் பராமரித்தல், இடர் முகாமைத்துவம் மற்றும் வலையமைப்புகளில் ஏற்படும் தடைகளைத் தாங்கும் திறன் ஆகிய துறைகள் தொடர்பான அறிவையும் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட சிறந்த நடைமுறைகளையும் பரிமாறிக்கொள்வதற்கான முக்கியமான தளத்தை வழங்கியது.
இப்பிராந்தியப் பயிற்சிப்பட்டறைக்கு இலங்கை பங்கேற்றதன் மூலம், டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் சர்வதேச இணைப்பு ஆகியவற்றின் அதிகரித்துவரும் மூலோபாய முக்கியத்துவத்தைக் கருத்திற்கொண்டு, இந்தியப் பெருங்கடல் மற்றும் தெற்காசியப் பிராந்தியத்தைச் சூழவுள்ள நாடுகளுக்கிடையிலான பிராந்திய ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தி வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.
இப்பயிற்சிப்பட்டறைக்கு முக்கியமான பங்களிப்பை வழங்குவதன் மூலம், இலங்கையிலும் மற்றும் ஒட்டுமொத்தப் பிராந்தியத்திலும் டிஜிட்டல் இணைப்பு மேலும் வலுப்படுத்தும் நோக்கில் பாதுகாப்பான, நம்பகமான, தடைகளைத் தாங்கக்கூடிய மற்றும் நிலைபேறான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்புகளை அபிவிருத்தி செய்து பேணுவதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்துவதற்கும், அத்துடன் இவ் இலக்குகளை அடைவதற்காகப் பிராந்திய மற்றும் சர்வதேசப் பங்காளர்களுடன் இணைந்து செயற்படுவதற்கும் தாம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு (TRCSL) மீண்டும் வலியுறுத்தியது.